ஆத்தூர் கிராமம் பெரிய வடுகப்பட்டியைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி வேலுச்சாமி (வயது 19). இவர் கரூரை அடுத்த ஆத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாங்காசோளிப்பாளையம் அருகில் அமைந்திருக்கும் பயன்பாட்டில் இல்லாத கல் குவாரி ஒன்றுக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். சுமார் 50 அடி ஆழம் கொண்ட குவாரியின் பாறை குழிக்குள், தன் சக நண்பர்கள் ராஜேஷ், மதன்குமார் உள்ளிட்ட நான்கு பேருடன் இறங்கிச் சென்று, தண்ணீருக்கு அருகில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது மது போதையில் நிலை தடுமாறி வேலுச்சாமி தண்ணீருக்குள் விழுந்ததையடுத்து, அவரது நண்பர்கள் விரைந்து சென்று கிராம மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீருக்குள் இறங்கித் தேடி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி அவரது உடலை மீட்டனர்.
![மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7240966_thu.jpg)
தொடர்ந்து வாங்கல் காவல் நிலைய காவல் துறையினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் உயிரிழந்த வேலுச்சாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த வேலுச்சாமியின் நண்பர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : ஜார்கண்டில் ஆற்றில் மூழ்கி 7 சிறுவர்கள் உயிரிழப்பு!