கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட புங்கம்பாடி பகுதியில் வசித்துவரும் தம்பதியர் மனோகரன், மணிமேகலை. இவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி ஆறு மாதங்கள் ஆன பிறகும் கரு உருவாகாமல் இருப்பதைக் காரணம் காட்டி உறவினர்கள், கணவன் உள்பட பலர் மணிமேகலையை திட்டிவந்தனர். இதனால் மனமுடைந்த மணிமேகலை கடந்த 10ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார்.
இதனையடுத்து அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். ஆனால் சிகிச்சைப் பலனளிக்காமல் மணிமேகலை உயிரிழந்தார்.
இது குறித்து மணிமேகலையின் தாயார் செல்லம்மாள் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்ய காரணமாக இருந்த உறவினர்கள், மனோகரன் உள்பட அனைவரின் மீதும் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.