கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சமத்துவபுரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் மாதத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே வருவதாகக் கூறி காலி குடங்களுடன் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் பேசுகையில், “தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட இடத்தில் சுமார் 30 குடும்பங்கள் நீரின்றி தவித்து வருகிறோம். பொதுமக்கள் பயன்பாட்டுக்கான தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஆதாரங்கள் பகுதியில் போர்வெல் அமைத்து சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தந்து மக்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்” என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதனையடுத்து, மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், தண்ணீர் பிரச்னையை போக்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். காலி குடங்களுடன் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.