முதுமைக்கு வேண்டியதை இளமையிலேயே தேடி வைத்துக்கொள்ள வேண்டும். வயதானால் சம்பாதிக்க முடியாது அல்லவா? ஆனால், வறுமை கரோனா வழியில் வந்தால் ஏழை, பாழைகள் என்ன செய்வார்கள். உலகமே கரோனாவைக் கண்டு அஞ்சுகிறது. இந்தியாவில் வாழும் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி, அடுத்த வேளை உணவிற்காக சாலையோரம் அலையும் காட்சி கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.
கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மக்களின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் விவசாயத் தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள் வருமானத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமலேயே உணவின்றித் தவித்து வருகின்றனர். தங்களது அன்றாடத் தேவைகளான பால், அரிசி, காய்கறி மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு கூட திண்டாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சாலையோரவாசிகள், ஆதரவற்றோர், பிஞ்சுக் குழந்தைகள் ஒரு வேளை சாப்பாட்டிற்கு கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள உப்பிடமங்கலம், கஞ்சமனூர், புலியூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'அரசு வழங்கிய 1000 ரூபாய் உதவி கிடைக்கப் பெற்றாலும் அதனை வைத்து குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை. வருவாய் இழப்பில் அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாத நிலைக்கு ஆளாகியுள்ளோம்' என வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களின் ஊதியத்தை குறைக்க அவசர சட்டம்