கரூர்: நேபாளத்தில் அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச மகளிர் கபடி போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநில அணிகள் பங்கேற்றன.
இதில் தமிழ்நாடு அணியில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் ஓர் அணியாக பங்கேற்றனர். தமிழ்நாடு அணி சிறப்பாக விளையாடிய முதல் பரிசை வென்றது.
இந்த அணியில் கரூர், ஜெகதாபியை அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்ற கல்லூரி மாணவியும் பங்கேற்றார்.
ஆனந்தி, ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை வணிகவியல் (எம்.காம்) முதலாம் ஆண்டு படித்து வருகிறார். போட்டியை முடித்து கொண்டு நேற்று(அக்.9) சொந்த கிராமத்திற்கு திரும்பிய ஆனந்திக்கு கிராம மக்கள் பட்டாசு வெடித்து, தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வெற்றி பெற்று சான்றிதழ் மற்றும் பதக்கங்களுடன் வந்த கபடி வீராங்கனை ஆனந்திக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மெரினா பீச்: பாதுகாவலர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை - நடவடிக்கை எடுக்குமா அரசு!