கரூர் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மண்ணின் கலை விழா, மாவட்ட கலை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி காந்தி வீதியில் உள்ள நாரதகான சபா அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் கிராமிய மேளம், கோலாட்டம், தப்பாட்டம், பறையாட்டம், இசை நாடகம், தேவராட்டம், பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மாவட்ட கலை விருதுகளை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பாண்டியராஜன் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில்,
"நாட்டுப்புறக் கலைஞர் வாரியத்தில் 33 ஆயிரத்து 500 பேர் இணைந்துள்ளனர். கலைஞர்கள் இணைய இந்த வாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் பண்பாடு துறையின் சார்பில் 'தமிழி டாட் காம்' என்ற இணையதளத்தை தொடக்கி வைக்கிறார். ஆண்டுதோறும் விருதுகள் வழங்குவதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மூன்று கோடி ரூபாயாக முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார்.
மேலும் கலையில் புதுமை செய்பவர்களுக்கு தலா ரூ. 75 ஆயிரம் அளிக்கப்படுகிறது. நதிக்கரை நாகரிகம் பாலாறு முதல் தாமிரபரணி வரை நடைபெற்றது. அதிலும் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் அமராவதி நதிக்கரை முக்கியமான ஒன்றாகும். எனவே அதனை கண்டிப்பாக கருத்தில் கொண்டு ஆய்வுகளை தொடங்குவோம்" என்றார்.
மேலும் படிக்க: அரசுப் பள்ளிகளில் அடுத்தாண்டு 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க திட்டம்: கல்வி அமைச்சர் செங்கோட்டையன்