தாந்தோன்றி மலை குறிஞ்சிநகர் பகுதியிலுள்ள மக்களுக்கு வீடு வீடாகச் சென்று கபசுரக் குடிநீரையும், கரோனா தொற்று பரவலைத் தடுப்பது, தற்காத்துக்கொள்வது குறித்த தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.
இதனையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ கொள்ளளவு உள்ள கபசுரக் குடிநீர் சூரணப் பொடிகள் வாங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக கரூர் நகராட்சி, குளித்தலை நகராட்சி, பள்ளப்பட்டி பேரூராட்சி பகுதிகளுக்குட்பட்ட மக்களுக்கு இன்று தொடங்கி தொடர்ந்து ஐந்து நாள்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்படவிருக்கின்றது.
கரூர் நகராட்சிக்குட்பட்ட 75 ஆயிரம் குடியிருப்புகளில் வசிக்கும் 3 லட்சம் நபர்கள், குளித்தலை நகராட்சிக்குட்பட்ட 30 ஆயிரத்து 580 நபர்கள், பள்ளப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 35 ஆயிரம் நபர்கள் என ஒருநாளைக்கு 3 லட்சத்து 65 ஆயிரத்து 580 நபர்களுக்குக் கபசுரக் குடிநீர் வழங்கப்படவுள்ளது.