கரூரில் ஊரக வளர்ச்சித்துறை, சுற்றுச்சூழல் மன்றங்கள் தேசிய பசுமை படை உள்ளிட்ட துறைகள் இணைந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மகளிர் சுகாதார வளாகம் அருகில், நூறு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி விழா ஊராட்சிக்குட்பட்ட காளிபாளையம் பகுதியில் நடைபெற்றது.
அதில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமைத் தாங்கி மரக்கன்றுகளை நட்டுவைத்தார். இதுகுறித்து அமைச்சர் பேசியதாவது, "மரக்கன்றுகள நட்ட பிறகு அதற்கு தண்ணீர் ஊற்றி தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டால் மட்டுமே கொண்ட நோக்கம் முழுமை அடையும். இப்பணியில் முக்கியமாக இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் முனைப்புடன் ஈடுபட வேண்டும். அப்போதுதான் இப்பணி முழுமையாக வெற்றியடையும்" என அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.