கரூர்: புஞ்சை தோட்டக்குறிச்சி அடுத்த அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் சி.பி.அன்புநாதன். பைனான்ஸ், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது, அதிமுக பிரமுகர்களுக்கு நெருக்கமாக இருந்த அன்புநாதனுக்கு சொந்தமான அலுவலகம், கிடங்கு, அவரது வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி பணம், ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த தொழிலதிபரிடம் 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக, கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த பிப். 20ம் தேதி அன்புநாதனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் அவருக்கு கடந்த மார்ச் 1ஆம் தேதி கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் அய்யம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டராஜ் என்பவருக்கு சொந்தமான 4 புள்ளி 5 ஏக்கர் நிலத்தை அன்புநாதன், அவரது உறவினர் பழனிசாமி உள்ளிட்ட 7 பேர் அபகரித்து கொண்டதாக, கடந்த 2021ம் ஆண்டு கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
மற்றொரு வழக்கில் கடந்த 1ஆம் தேதி அன்புநாதனுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அளித்த கடிதம் காரணமாக அவர் நேற்று திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இதனிடையே நிலமோசடி வழக்கில் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நீதிபதி அம்பிகா முன் திருச்சி மத்திய சிறையில் இருந்து அன்புநாதனை அழைத்து வந்து, கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று (மார்ச்.2) ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். இதே வழக்கில் அன்புநாதன் மனைவி கண்ணகி உள்ளிட்ட ஆறு பேர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றுள்ளனர். முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு மிக நெருக்கமாக இருந்ததாக கூறப்படும் அன்புநாதன், திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்படும் முன் மீண்டும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ‘சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது’ - எடப்பாடி பழனிசாமி