கரூர் மாவட்டம், தோகமலை அருகே சின்னபனையூரில் விடுதலை சிறுத்தை கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் நேற்று முன்தினம் (ஜீன்.12) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று (ஜூன்.13) மதியம் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 1.55 லட்சம் நிதி உதவி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவி ஆக இயங்குகிறார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், பேச்சிலும் தன்னை ஒரு ஆர்எஸ்எஸ் காரராகவே காட்டிக் கொள்கிறார். அவர் தனது ஆளுநர் பதவியில் இருந்து விலகி முழுநேர ஆர்.எஸ்.எஸ் தொண்டராக பணியாற்றுவது தான் பொருத்தமானது.
அவர் பதவி விலக வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு மக்களின் விருப்பம் என்பதை விடுதலைச்சிறுத்தை கட்சியின் வாயிலாக சுட்டிக் காட்டுவதாகவும், அவரது போக்கு மிகவும் ஆபத்தானது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்திய தேசத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அணுகுமுறையாகும்.
ஆளுநர் பதவியில் இருந்துகொண்டு சனாதன கொள்கைகளைப் பற்றி பரப்புரை செய்வது அதிர்ச்சி அளிக்கிறது. அதனை விடுதலை சிறுத்தை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் நபிகள் நாயகத்தைத் தவறாகப் பேசிய பாஜகவை சேர்த்த நுபூர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது யோகி அரசு வன்முறையை தூண்டி விட்டுள்ளது.
இந்த போராட்டத்தை முன்னின்று பங்கேற்ற ஜாவித் அகமது என்பவர் வீட்டை யோகி அரசு சட்டத்திற்குப் புறம்பாக கட்டி உள்ளதாக கூறி இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக படிக்கும் அவரது மகள் ஒரு அமைப்பின் மூலம் சமூக நீதிக்காக, சகோதரத்துக்குவாக போராடி வருகிறார்.
அதனைப் பொறுத்துக் கொள்ளாத யோகி அரசு அவரது வீட்டை இடித்து இருப்பது கண்டனத்துக்குரியது. இது மிக மோசமான பயங்கரவாத போக்கு, இது ஒட்டுமொத்த நாட்டுக்கே பரவக்கூடிய அநாகரீகமான, அருவருப்பான அணுகுமுறை, இந்த அராஜகத்தை விடுதலை சிறுத்தை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் பதவியில் இருக்க அருகதையற்றவர். எனவே அவர் பதவி விலக வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
கரூர் மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரை புதிதாக அமைக்கப்பட்டு வரும் காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வறட்சியில் உள்ள விராலிமலை தோகமலை பகுதி வழியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதுகுறித்து விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விசிக கட்சி சார்பில் உள்ள உறுப்பினர்கள் வலியுறுத்துவார்கள்.
இந்நிகழ்ச்சியின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைமை நிலைய முதன்மை செயலாளர் சேகுவாரா, திருச்சி கரூர் மண்டல அமைப்புச் செயலாளர் கிட்டு, கரூர் மாவட்ட பொருளாளர் அவிநாசி, மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் அறிவழகன், கராத்தே இளங்கோ, மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர் ராமச்சந்திரன், கண்மணி ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: அரசியலமைப்புச் சட்டம் பெரிதா? ஆளுநர் பெரிதா? - திருமாவளவன் திட்டவட்டம்