கரூர் மாவட்டம் காந்திகிராம் மாற்றுத்திறனாளி அரசுப்பள்ளி ஆசிரியர் மோகன். இவரது மனைவி அம்சியா. இவர்களது மகள் திவிஷா (15) தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார்.
இவர் மடிக்கணினி வாங்குவதற்காக ஐந்தாயிரத்து 500 ரூபாயைச் சேமித்துவைத்திருந்தார். அவ்வாறு சேமித்துவைத்த தொகையை கரோனா நிவாரண நிதிக்காக வழங்க முடிவுசெய்தார்.
அதன்படி கரூர் மாவட்ட ஆட்சியர் முன்பு தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சேமிப்புத் தொகையை மாணவி வழங்கினார்.
அதனைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மாணவியைப் பாராட்டி நன்றி தெரிவித்தார்.
இது குறித்து திவிஷா பேசுகையில், “முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று என்னால் முடிந்த சிறு உதவியைச் செய்தேன். மடிக்கணினியைவிட மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்புவதே முக்கியம்.
கரோனா பாதிப்பு அதிகரிப்பதால் பொதுமக்கள் தகுந்த இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அனைவரும் முகக்கவசம் அணிந்து அரசு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி