கரூர்: அரசு மணல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளை சரி செய்யக்கோரி, தமிழ்நாடு மணல் லாரி கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் தலைமையில் கரூரில் உள்ள, பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, தமிழ்நாடு மணல் லாரி கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் கூறுகையில், "கரூர் மாவட்டத்தில் மண்மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட வாங்கல் மல்லம்பாளையம், என்.புதூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரிகளில், வெளி மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் மணல் கொண்டு செல்லும் லாரிகளுக்கு, இரண்டு நாட்களில் மணல் வழங்க வேண்டும். ஆனால், 8 நாட்கள் மணல் வழங்கப்படாமல் லாரிகள் காத்திருப்பதால், அதற்கான கூலியும் சேர்த்து மணல் விலை வெளிமார்க்கெட்டில் அதிகமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு மணல் குவாரிகளில், ஆற்றிலிருந்து லாரிகளுக்கு மணலை வழங்கும் ஒப்பந்ததாரர், தனியாக லாரிகளுக்கு மணல் வழங்கி வருகிறார். இதனால், சட்டவிரோதமாக மணல் கடத்தல் அரசு மணல் குவாரிகளில் நடைபெறுகிறது. இந்த விதிமுறை மீறல்கள் குறித்து தட்டி கேட்ட தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்கள் கூட்டமைப்பின், கரூர் மாவட்ட தலைவர் கருணாகரன் மற்றும் மாவட்ட பொருளாளர் சிவபதி ஆகியோர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வாங்கல் காவல் நிலையத்தில் அதிகாரியை வேலை செய்ய விடாமல் தடுத்ததாக கூறி கடந்த மார்ச் 13-ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும். இது தவிர உள்ளூர் மணல் தேவைக்காக மாட்டு வண்டியில் மணல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாட்டு வண்டிகள், சில லாரிகளுக்கு வெளி மாநிலங்கள் கொண்டு செல்லும் வகையில் மணல் வழங்கி வருகின்றனர். இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.
கரூர் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில், கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 தினங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், சென்னையில் ஜூன் 6-ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
மேலும், "தமிழகம் முழுவதும் காலாவதியான சுங்கச்சாவடிகள் என கணக்கிடப்பட்ட சுங்கச்சாவடிகள், இன்னும் அகற்றப்படாமல் சுங்கவரி வசூல் செய்து வருகிறது, இதனை அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு அந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்வது போல, தேசிய அனுமதி பெற்ற லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும்.
இவை அனைத்தும் தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த செய்தியாளர் சந்திப்பில் சட்ட விதிமுறை மீறல்கள், அரசு மணல் குவாரிகளில் நடைபெறுகிறது என தெரிவிக்கிறோம். அரசு அதிகாரிகள் மெத்தனம், விதிமுறைகள் மீறல், மணல் திருட்டு ஆகியவற்றை தமிழக முதல்வருக்கு கொண்டு செல்ல வேண்டிய உளவுத்துறை செயலிழந்து விட்டது. ஆகவே, ஊடகங்களில் இதனை வெளிப்படையாக தெரிவிக்கிறோம்.
தேவையில்லாமல் துவங்கப்பட்டுள்ள காவல் சுங்கச்சாவடிகளால், லாரியை பிடித்து வைத்து கட்டாய வசூல்களை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கும்மிடிபூண்டி சுங்கச்சாவடியில் ரூபாய் 1000 கொடுத்தால் மட்டுமே வாகனங்கள் சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் எங்கள் லாரி சங்க உறுப்பினர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அரசுக்கு மறுபுறம் வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக நடைபெறும் சம்பவங்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. லாரி ஓட்டுனர்களுக்கு தெரியாமல் டிஜிட்டல் மையம் என்ற பெயரில் அபராதங்கள் விதிக்கப்படுகிறது. இவை அனைத்தையும் அரசு கண்காணிக்க வேண்டும்" என்று கூறினர்.
இதையும் படிங்க: ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடை மாற்றம்.. பின்னணி என்ன?