கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்.11ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. கணவரால் கைவிடப்பட்ட பெண்ணொருவர் தானும் தன் மகனும் ஆதரவற்ற நிலையில் வசித்து வருவதாகவும்; ஆதலால், தங்களுக்கு வீடு வழங்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்ததார். இதை அடுத்து, ஒரே மணி நேரத்தில் வீட்டு வசதி செய்து தரப்பட்டது.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கே சென்று மனுக்களை பெற்றுக்கொண்டு கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மாற்றுத்திறனாளியின் தாய் அளித்த கோரிக்கை மனு:
அக்குறைதீர்க்கும் கூட்டத்தில் காந்திகிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்பவர், தன் கை, கால் செயலிழந்த; வாய் பேச இயலாத மகன் ரவிச்சந்திரனுடன்(29) வந்து கோரிக்கை மனு அளித்தார்.
தன் மகன் மாற்றுத்திறனாளி என்பதால், யாரும் தங்களுக்கு வாடகைக்குக் கூட வீடு தர மறுப்பதாக கண்ணீர் மல்க கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார். தான் கணவனால் கைவிடப்பட்டதுடன் மாற்றுத்திறனாளி மகனுடன் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும்; தற்போது தனது உறவினர் வீட்டில் வசித்து வருவதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
அவலப்பெண்ணின் குரலை அமைச்சருக்குப் பதிவுசெய்த ஆட்சியர்
அவரின் நிலைமையை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் உடனே அமைச்சர் செந்தில்பாலாஜியைத் தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார். விவரங்களை கேட்டுக்கொண்ட அமைச்சர், அந்த பெண்ணுக்கு காந்தி கிராமத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியஅடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கி கொடுக்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மாற்றுத்திறனாளி மகனை எளிதில் அழைத்துச்செல்ல ஏதுவாக தரைதளத்தில் வீடு ஒதுக்குமாறும், சக்கரை நாற்காலியில் சென்று வர ஏதுவாக சாய்தள வசதிகள் செய்து தருமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஒரு மணி நேரத்தில் ஒதுக்கப்பட்ட வீடு
இதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் அந்தப்பெண்ணுக்கு ரூ.8.35 லட்சம் மதிப்புள்ள வீடு தரைதளத்தில் ஒதுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவர்களை அரசுவாகனத்தில் அழைத்துச் சென்று அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கீழ்த்தளமான ஏ2 பிளாக்கில் அலுவலர்கள் குடியமர்த்தினர்.
மேலும், குடியிருப்பிற்கு பயனாளி செலுத்த வேண்டிய தொகையான ரூ.1.88 லட்சம் பணத்தை மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து செலுத்துவதாகத் தெரிவித்தார்.
இது குறித்து சந்திரா தெரிவிக்கையில், 'கணவனால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் மாற்றுத்திறனாளி மகனுடன் வசித்து வருகின்றேன். பிறந்தது முதல் கை,கால்கள் இயங்காத வாய் பேச இயலாத நிலையில், 29 வயதுடைய மகனுடன் உறவினர் இல்லத்தில் இருக்கின்றேன். கூலித்தொழிலுக்குச் சென்று எனது மகனை காப்பாற்றிவந்தேன்.
கரோனா காலத்தில் எந்த வேலையும் இல்லாமல், மிகவும் சிரமப்பட்டு வந்தேன். இந்நிலையில், எனது நிலைமையினை எடுத்துக்கூறி, இருக்க வீடு கேட்டு கோரிக்கை வைத்தேன். கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து, கோரிக்கை வைத்து வருகின்றேன்.
ஆனால், தற்போது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின்படி, காந்தி கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து தந்துள்ளனர். ஆதரவற்ற நிலையில், மாற்றுத்திறனாளி மகனுடன் வாழ்வதற்கு வழி தெரியாத எனக்கு மனு அளித்த ஒரு மணி நேரத்திற்குள் வீடு ஒதுக்கீடு செய்து, கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் மனமார்ந்த நன்றிகளை நெகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்' என்றார்.
இதையும் படிங்க: காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு