அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வியூகங்கள் பற்றி விவாதிக்க அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அரவக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன், சத்துணவுத் துறை அமைச்சர் சரோஜா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இக்கூட்டத்தில் தங்கமணி பேசுகையில், "எதிரிகள் மற்றும் துரோகிகளுக்கு இடைத்தேர்தலில் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்துக் காட்டும் நாள் மிக விரைவில் உள்ளது" என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் கூறுகையில், "22 தொகுதிகளில் நடக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எங்கள் கட்சி மாபெரும் வெற்றி பெறும். செந்தில் பாலாஜி என்றுமே தவறான கணக்கு போடக்கூடியவர். ஜெயலலிதா இறந்த இரண்டு மாதங்களில் ஆட்சி மாற்றம் வரும் என அவர் நினைத்தார். இந்த ஆட்சி என்றும் நிலைக்கும். அவரின் கனவு பலிக்காது. எங்கள் வேட்பாளர் செந்தில்நாதன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றிபெறுவார்" என்றார்.