கரூர்: டிஎன்பிஎல் ஆலை முன்பு போராட்டம் செய்த தொழிலாளர்கள் மீது வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புகளூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் (டிஎன்பிஎல்) செயல்பட்டு வருகிறது. இங்கு நிரந்தரப் பணியாளர்கள் 2,500 பேர், ஒப்பந்த பணியாளர்கள் நான்காயிரம் என மொத்தம் சுமார் 6,500 பேர் மூன்று பணி நேரங்களில் வேலை செய்து வருகின்றனர்.
கரோனா தொற்றினால் கரூர் டிஎன்பிஎல் காகித ஆலையில் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்த குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும், இரண்டு நபர்கள் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதனால், தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரும் அச்சத்தில் உள்ளனர்.
இதனால், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி நேற்று (மே.15) மாலை ஆலை முன்பு சுமார் 200 தொழிலாளர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், அரசு அறிவித்தபடி டிஎன்பிஎல் ஆலைப் பகுதியில் உடனடியாக கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவின் அடிப்படையில் ஆலையின் உற்பத்தியை நிறுத்தி, சம்பளத்துடன் கூடிய விடுப்பை அறிவித்திட வேண்டும், ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் கரோனா தொற்றால் இறந்து போன தொழிலாளியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும்.
மேலும், தொழிலாளியின் குடும்ப உறுப்பினர்களுக்கு கரோனா தொற்றினால் பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்ய ஆகக்கூடிய முழு மருத்துவ செலவினையும் நிர்வாகம் ஏற்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆலை நிர்வாகத்திடம் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த சமரசமும் ஏற்படவில்லை. இந்நிலையில், அனைத்து தொழிற்சங்கங்கள் கூடி மீண்டும் தொடர் போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என கூறியதால் தற்காலிகமாக தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
இதனிடையே இந்த போராட்டம் தொடர்பாக ஊரடங்கு மீறி, ஆலை முன்பு அதிகளவில் தொழிலாளர்கள் கூடியதாக வேலாயுதம்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: மூதாட்டியை உயிருடன் கடித்து தின்ற தெரு நாய்கள் கூட்டம்' பெங்களூரில் அதிர்ச்சி!