நாடு முழுவதும் சுபாஷ் சந்திரபோஸின் 124ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. நேதாஜி என்று அன்போடு அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ், இளைஞர்களை எழுச்சியுற செய்த மாவீரர் ஆவார். 'உங்கள் குருதிகளை தாருங்கள் சுதந்திரத்தை பெற்றுத் தருகிறேன்' என்று கூறி இந்தியர்களின் மனதில் சுதந்திர வேட்கையை விதைத்தார். உலகமே போற்றும் இவரது வீரம் வரலாற்றுச் சான்றுகளால் பொறிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய சுபாஷ் சந்திரபோஸ், "சுதந்திரம் பெற அகிம்சை மட்டும் போதாது, தீவிரவாதம் தான் சரியானது" என்று எடுத்துரைத்தார். நேதாஜி பெயரைச் சொன்னால் இந்தியர்களுக்கே உரித்தான கர்வம் தோன்றும்.
அவர் மறக்க முடியாத சரித்திரமாக வாழ்ந்துவருகிறார் என்பதே நிதர்சனம். அந்த வகையில், அவரது 124ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் ஜவகர் பஜார் பகுதியில் நேதாஜியின் சிலை புதுப்பிக்கப்பட்டு, அவரது இன்று சிலை திறக்கப்பட்டது.
கரூர் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர் வாரிசுகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனைத்தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள், அவர்களின் உறவினர்களுக்கு மரியாதை அளிக்கும்விதமாக ஆடை அணிந்து கௌரவித்தார்.