கரூர்: கரூரில் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி (school girl) பாலியல் தொல்லையால் நேற்று முன்தினம் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று (நவ.21) இந்திய மாணவர் சங்கத்தின்(students federation of India) மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் உயிரிழந்த பள்ளி மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் ஈடிவி பாரத் தமிழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், "இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதால், அமெரிக்கப் பெண்கள் இந்தியாவிற்கு தனியாக செல்ல வேண்டாம் என அமெரிக்கத் தூதரகம் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த அளவிற்கு இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கோவை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக கடந்த நான்கு நாட்களாக, கல்வி நிலையங்களில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டு எழுகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வதைத்த காவல் ஆய்வாளர்
கரூரில் 12ஆம் வகுப்பு வகுப்பு மாணவி நேற்று முன்தினம் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பெயரை வெளியிட பயமாக இருக்கிறது என கடிதத்தில் கூறியுள்ளார்.
ஆனால், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கண்டறிய வேண்டிய காவல் துறை, குறிப்பாக வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசன், உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை இரவில் இருந்து அதிகாலை 5 மணிவரை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து மனவேதனைக்கு உள்ளாக்கியுள்ளார்.
பெற்றோர் மனநிலையை அறியாமல் அராஜகமாக நடந்து கொண்டுள்ளார். உறவினர்களைத் தாக்கவும் செய்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்காக வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசன் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மனித உரிமை ஆணையத்தின் விசாரணைத் தேவை
மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நீட் தேர்வு நிச்சயம் திரும்பப் பெறப்படமாட்டாது' - அண்ணாமலை