Jewelry Robbery: கரூர் அருகே மாயனூர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உதவிப் பொறியாளராகப் பணியாற்றிவரும் புகழேந்தி, குடும்பத்துடன் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பகுதியில் ஓய்வுபெற்ற காவல் அலுவலரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்துவருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல புகழேந்தி பணிக்குச் சென்ற நிலையில், ஜனவரி 5ஆம் தேதி மதியம் 3 மணியளவில் அவரது வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி பிரதீபாவிடம் (29) இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி வந்து இறங்கிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், உங்களுடைய கணவர் புகழேந்தி இளநீர் கொடுத்து அனுப்பியதாகப் பேச்சுக் கொடுத்துள்ளார்.
அதனை நம்பி கதவைத் திறந்து வெளியே வந்த பிரதீபாவின் முகத்தில், மறைத்துவைத்திருந்த மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த ஆறு சவரன் தங்கச் சங்கிலியை அந்த அடையாளம் தெரியாத நபர் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், இது குறித்து குளித்தலை காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். பின்னர் பிரதீபா, அவரது குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் மிளகாய்ப் பொடி தூவி தப்பி ஓடிய அந்த நபர் யார் என்பது குறித்து குளித்தலை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
வீட்டில் தனியாக உள்ள பெண்களை குறிவைத்து மிளகாய்ப் பொடி தூவும் நூதன திருடர்களால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவிட்டது - அமைச்சர் சக்கரபாணி