கரூர் மாவட்டம் ஆத்தூர் கிராமம் காந்திநகரைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் தனது நண்பர்களான மார்ட்டின், தீனதயாளன், சித்தார்த், மணிகண்டன், வீரக்குமார், அஜித் ஆகிய ஏழு பேருடன் சேர்ந்து வேட்டை நாயின் உதவியுடன் அருகில் உள்ள வனப்பகுதிக்கு வன விலங்குகளை வேட்டையாடச் சென்றுள்ளார்.
அப்போது பிடிபட்ட முயல், காடை, அணில் உள்ளிட்ட வன உயிரினங்களைச் சமைத்து சாப்பிட்டுள்ளனர். மேலும், இதைப் புகைப்படம் எடுத்த இளைஞர்கள், டிக்டாக், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதைக் கண்ட கரூர் மாவட்ட காவல் துறையினர், வனத் துறை அலுவலர்களுக்குத் தகவல் அளித்ததையடுத்து, வனத் துறை அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வன உயிரினங்களை வேட்டையாடி குற்றத்திற்காக இளைஞர்கள் ஏழு பேரை இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தக் குற்றங்களுக்காக 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் மூன்றாண்டு முதல் ஏழாண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் என வனத் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் பார்க்க:விலங்குகள் மூலம் கரோனா பரவல்: தயார் நிலையில் அரசு