கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஜோதிமணிக்கு ஆதரவாக, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரான செந்தில் பாலாஜி பல இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில் தேர்தல் பரப்புரையின் இறுதி நாளுக்கு முந்தைய நாள் இரவு இறுதிக்கட்ட பரப்புரையை கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அன்பழகனை அவரது இல்லத்தில் சந்தித்து முறையிட செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் செந்தில்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முறையிட சென்றனர்.
இதையடுத்து, இரவு நேரத்தில் மாவட்ட ஆட்சியர் என்றும் பாராமல் தன்னை தாக்க வந்ததாக ஆட்சியர் அன்பழகன் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கறிஞர் செந்தில்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அடையாளம் தெரியாத 50 பேர் மீது ஆட்சியர் வீட்டிற்குள் அத்து மீறி நுழைய முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எம்எல்ஏ செந்தில் பலாஜி, எம்.பி ஜோதிமணி ஆகியோர் நீதிபதி விஜயகார்த்தி முன்னிலையில் ஆஜராகினர். பின்னர் ஜாமீன் தார்களை முன்நிறுத்தி, வழக்கில் இருந்து இருவரும் நிபந்தனையற்ற ஜாமீன் பெற்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, பொய்யான ஒரு வழக்கினை ஆளும் கட்சியனரின் தூண்டுதலின் பெயரில் ஆட்சியர் போட்டுள்ளார். மேலும் ஆட்சியரின் வீட்டிற்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான காணொளி காட்சிகளை அவர் செய்தியாளர்களிடம் வெளியிட வேண்டும் என்றார்.