கரூர்: மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, பல்வேறு துறைகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியினை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட புகலூர் மற்றும் பரமத்தி பகுதிகளில் ரூ.3,243 லட்சம் மதிப்பிலான சாலை விரிவாக்க பணிகளின் பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, இளங்கோ, மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், பொதுப்பணித்துறை கோட்ட செயற்பொறியாளர் ரவிக்குமார், புகலூர் வட்டாட்சியர் மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 6 நாட்களுக்கு மேல் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. நிலக்கரி பற்றாக்குறை தற்போது இல்லை. இன்னும் இரண்டு நாட்களுக்குள் 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. மற்ற மாநிலங்களுக்கு உபரி மின்சாரம் கொடுக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மின்னகம் மின் நுகர்வோர் மையத்திற்கு இதுவரை 8 லட்சம் புகார்கள் வந்துள்ளன. அதில் 99 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது. முதலமைச்சரின் நடவடிக்கையால் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் கொடுக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறந்து விட்ட பிறகு மின் உற்பத்தி தொடங்கப்படும். தமிழ்நாட்டில் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிக அளவில் தற்போது கிடைத்து வருகிறது. இதன் காரணமாக செலவை குறைக்கும் வகையில், அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட மற்ற வகைகளில் கிடைக்கப்பெறும் மின் உற்பத்தி அவ்வப்போது நிறுத்தப்பட்டு வருகிறது.
சீமான் வீட்டில் மின்தடை ஏற்பட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவர் வீட்டு மின் இணைப்பு எண் குறித்து இரண்டு முறை கேட்டிருந்தேன். இதுவரை பதில் அளிக்கவில்லை. மின் இணைப்பு எண் என்ன என்று சீமான் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 4,320 மெகாவாட். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் சொந்த மின் உற்பத்தி கூடுதலாக 6 ஆயிரத்து 220 மெகாவாட் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலையை குறைக்கச் சொல்வது தேவையற்ற வாதம் ! - அமைச்சர் சிவசங்கர்