தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே.19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் திமுக வேட்பாளராக செந்தில் பாலாஜி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து, இன்று உடனடியாக பரப்புரையை செந்தில் பாலாஜி தொடங்கியுள்ளார்.
இன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேந்தமங்கலம் மேல்பாகம் ஊராட்சி பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களின் குடிநீர் பிரச்சனையை போக்குவதற்காக கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீண்டும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராகி ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் கிடைக்க சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்வேன் என தெரிவித்தார்.
இந்த பரப்புரையின்போது திமுக மாநில விவசாய அணி செயலாளர், நெசவாளர் செயலாளர், கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர். மற்ற முக்கிய கட்சிகள் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பரப்புரையைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.