கரூர்: அடுத்தடுத்த வழக்குகளில் யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து ஆற்று மணல் அள்ளுவது தொடர்பாக அவதூறாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக சாட்டை யூடிப் சேனல் துரைமுருகன் மீது நடவடிக்கை கோரி கரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையிடம் திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குடியரசு கடந்த மே மாதம் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து திருச்சியை சேர்ந்த ஒரு உதிரிபாக விற்பனை கடைக்காரர் வினோத் என்பவர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கூறி சாட்டை துரைமுருகன் போராட்டம் நடத்தினர். மேலும், வினோத்தை மிரட்டி மன்னிப்பு வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் கார் உதிரிபாக கடைக்காரரை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் யூடியூபர் துரைமுருகனை கைது செய்து லால்குடி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கரூர் சைபர் கிரைம் காவல்துறையினர் திமுக வழக்கறிஞர் அளித்த புகாரை விசாரித்து வழக்குப்பதிவு செய்ததுடன் லால்குடி சிறையிலிருந்த துரைமுருகனை கரூர் சிஜேஎம்-2 நீதிமன்றத்தில் ஜூன் 15 ஆம் தேதி ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி சுஜாதா துரைமுருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை