சேலம்- கரூர், பழனி-கோவை, பொள்ளாச்சி-கோவை ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தெற்கு ரயில்வேயில் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக இயக்கி வரப்பட்ட சேலம்-கரூர், சேலம்-பழனி, கோவை-பழனி, பொள்ளாச்சி-கோவை ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவை தற்போது நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் டெல்லியில் இருந்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காணொலிக் காட்சி மூலம் மூன்று பயணிகள் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் சேலம்-கரூர் பயணிகள் ரயில் சேவை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
சேலம்-கரூர் ரயில்:
வண்டி எண் 76801 சேலம்-கரூர் சேலம் பயணிகள் ரயில் சேலத்தில் இருந்து பகல் 1.40 மணிக்கு புறப்பட்டு மாலை 3.25க்கு சென்றடையும். வண்டி எண்76802 கரூரில் இருந்து காலை 11.40 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு பகல் 1.25 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் வங்கல், மோகனூர், நாமக்கல், கலங்கனி, ராசிபுரம், மல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும், ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சேலம் ரயில்வே கோட்டத்தில் உட்பட்ட கோவை-பெங்களூரு, கோவை-மதுரைக்கு புதிய ரயில்கள் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை முதல் ஹவுரா வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் நிரந்தரமாக்கப்பட்ட இரண்டு ரயில்கள் - பயணிகள் மகிழ்ச்சி