கரூரில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செயலாளருமான செ. நல்லசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாள்தோறும் நீர் பங்கீடு முறை இருந்திருந்தாலும் அல்லது காவிரி தீர்ப்பினை மதித்து கர்நாடகம் நீரை மாதாந்திர முறையில் தந்திருந்தாலும் குறுவை சாகுபடி சாத்தியமாகியிருக்கும். இது சாத்தியமாகியிருந்தால் நடப்பாண்டில் கடலுக்கு உபரி நீர் சென்றிருக்காது.
தமிழ்நாட்டில் நிபந்தனைகளின்றி நீரா (தென்னை மரத்திலிருந்து இறக்கும் ஒருவகை பானம்) இறக்குவதற்கு அனுமதியளித்தால் மட்டுமே நீராவை சந்தைப்படுத்துதல் முறை வெற்றிபெறும். பசுமாட்டிற்கு வாய்ப்பூட்டு போட்டு மேயவிட்டால் எப்படி மேய முடியாதோ, அப்படித்தான் நீரா பானம் இறக்குவதற்கு அரசு விதித்த கட்டுப்பாடுகளும் உள்ளன. தனிநபர் காப்பீடுபோல, ஆயுள் காப்பீடு மாற்றியமைக்க வேண்டும். மாற்றியமைக்காத வரை பயிர்க்காப்பீடு என்பது காப்பீடு நிறுவனங்களின் வேட்டைக்காடாகத்தான் இருக்கும்.
உலகின் மக்கள் தொகை 2100ஆம் ஆண்டில் 1000 கோடியை தாண்டும் என அஞ்சப்படுகின்றது. உலகம் சூடாக மாறிவிட்டதற்கு மக்கள் தொகைப்பெருக்கமே மூலக்காரணம். ஆகவே, மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயம். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு பாண்டியாறு- மோயாறு திட்டத்தினை நிறைவேற்றிட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:நீரா பானம் தயாரிப்பு விவசாயிகளின் பொருளாதர தாகத்தை தீர்க்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர்