கோயம்புத்தூர்: கரூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கனகராஜ் (55). நவம்பர் 22 ஆம் தேதி காலை அவர், வெங்கக்கல்பட்டி பிரிவு மேம்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த வேனை ஆய்வாளர் கனகராஜ், நிறுத்த முயன்றார். ஆனால், அந்த வேன் நிற்காமல் கனகராஜ் மீது மோதிவிட்டு சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலு உத்தரவின்பேரில் கரூர் டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே வேன் மோதி உயிரிழந்த போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோயம்புத்தூரில் உள்ள போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜின் இல்லத்தில் அவரது குடும்பத்தாரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: அரசு பேருந்து படிக்கட்டு உடைந்ததால் பரபரப்பு