கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்த ரெட்டியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான இவரின் தந்தை, தாத்தா இருவரும் இயற்கை விவசாயிகள். அவர்களைப்போல் இவருக்கும் இயற்கை விவசாயம் செய்யவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாகும். அதற்கேற்றார்போல் இயற்கை விவசாயி நம்மாழ்வாரிடம் இவர் இயற்கை விவசாயமும் கற்றுள்ளார்.
காவல் ஆய்வாளர் பணிக்கு பின், அவரின் ஆசை நிறைவேறியுள்ளது. சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் தற்போது இயற்கை விவசாயம் செய்துவருகிறார். அவருடைய தோட்டத்தில் மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய ஆப்பிள் சாற்றை சிகப்பு ஆப்பிள், ருத்ராட்ச மரம், பிஸ்தா மரம் என 100 வகையான மரங்களும் மூலிகைச் செடிகளும் உள்ளன.
மேலும் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை வளர்த்து அதில் கிடைக்கக்கூடிய விதைகளை இலவசமாக வழங்கி நாட்டு காய்கறிகள் வளர்ப்பை ஊக்குவித்து வருகிறார். இவரது தோட்டம் பள்ளி, கல்லூரியிலிருந்து மாணவர்கள் பார்வையிடும் அளவிற்கு புகழ்பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் தோட்டத்தில் நர்சரி ஒன்றை அமைத்து அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகளையும் வழங்கிவருகின்றார்.
இதையும் படிங்க: 'பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மழையால் செழித்த விவசாயம்' - மனம் நிறைந்த புதுக்கோட்டை விவசாயிகள்