கரூர்: தோகைமலை அருகே உள்ள நல்லூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் நல்லூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நல்லூர்-கலிங்கப்பட்டி பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்த ஈச்சர் லாரியைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஓட்டுநர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.
இதில் சந்தேகமடைந்த காவல் துறையினர் லாரியைச் சோதனை செய்தனர். இதில், தமிழ்நாடு அரசால் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி ஐந்து டன் இருந்ததைக் காவல் துறையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் நாமக்கல் மாவட்டம் வலையக்காரனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பதும், தோகமலை, நல்லூர், பணிக்கம்பட்டி போன்ற கிராமங்களில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை நாமக்கல் மாவட்டத்திலுள்ள கோழிப்பண்ணைக்கு கொண்டுசென்று அதிக விலைக்கு விற்பதற்கு ஏற்றிச் சென்றதும் தெரியவந்தது.
பின்னர், லாரியைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் ஓட்டுநர் பழனிச்சாமியை கைதுசெய்து விசாராணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் பறிமுதல்செய்யப்பட்ட ஐந்து டன் ரேஷன் அரிசியை கரூர் குடிமைப்பொருள் வழங்கல் துறையில் ஒப்படைத்தனர்.