கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்திற்கு உள்பட்ட காணியாளம்பட்டி பகுதியில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில், ஜக்காயி அம்மன் எனும் கோயில் உள்ளது. இங்கு கோயிலுக்கு சொந்தமான ’ஜக்காயி’ எனும் பெயர் கொண்ட காளை ஒன்று கடந்த 18 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளது.
இந்தக் காளை கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்துவந்த நிலையில், நேற்று (அக்.30) மதியம் உயிரிழந்தது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பொது இடத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக இக்காளையின் உடல் வைக்கப்பட்டது.
மேலும் இன்று (அக்.31) இரவு ஒரு மணியளவில் காளைக்கு சிறப்பு பூஜை நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கரூர் மாவட்டம் மட்டுமல்லாது, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் இக்காளைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்தக் காளை பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை அள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.