கோவை மாவட்டத்தை தலைமையிடமாக கொண்ட யூடிஎஸ் என்ற நிதி நிறுவனம் கரூரில் செயல்பட்டுவருகிறது.
ரூ.1 லட்சம் கட்டினால், 10 மாதத்தில் ரூ.2 லட்சம் கிடைக்கும் எனக் கூறி கரூர் யூடிஎஸ் நிறுவனத்தின் மேலாளரும் அரசுப்பள்ளி ஆசிரியருமான ஜெஸ்டின் பிரபாகரன் என்பவர் பொதுமக்களிடம் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பி பேரூர், தேசியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 நபர்கள் ரூபாய் ஒரு கோடி வரை அவரிடம் கொடுத்துள்ளனர்.
பணம் கொடுத்த நபர்கள் மீண்டும் பணத்தை திருப்பிக் கேட்டபோது ஆள்வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதில் தேசியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரேமா என்பவர் மட்டும் ரூ 3 லட்சம் வரை கட்டி ஏமாற்றம் அடைந்துள்ளார்.
எனவே பாதிக்கப்பட்ட நபர்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்
நிதி நிறுவனத்தில் பணத்தை ஏமாந்த ரம்யா என்பவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஒரு லட்சம் கட்டினால் 2 லட்சம் தருவதாக கூறியதால் நிதி நிறுவனத்திடம் அரசுப் பள்ளி ஆசிரியர் ஜஸ்டின் என்பவர் மூலம் பணத்தை கொடுத்தோம்.
ஆனால் இதுவரை பணத்தை திருப்பி தராமல் நிதி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. ஆகவே எங்களை ஏமாற்றிய நிதி நிறுவனம், அரசுப் பள்ளி ஆசிரியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.