கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதியில் புணவாசிபட்டியைச் சேர்ந்த அசுரன் பாய்ஸ் என்ற இளைஞர் குழு மது அருந்தும் போட்டி இன்று நடத்த திட்டமிட்டிருந்தனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விளம்பரங்கள், சுவரொட்டிகள் பரப்பப்பட்டுவந்தன.
மேலும் இந்த மது அருந்தும் போட்டிக்கு வரும் இளைஞர்கள் நுழைவுக் கட்டணமாக 1000 ரூபாய் செலுத்த வேண்டும். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுத்தொகையாக முதல் பரிசு ரூ.15001, இரண்டாம் பரிசு ரூ.10001, மூன்றாம் பரிசு ரூ.7001, நான்காம் பரிசு ரூ.5001 என விளம்பரம் பரப்பப்பட்டுவந்தன.
இதனையடுத்து இத்தகவலையறிந்த லாலாப்பேட்டை காவல் துறையினர், இப்போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் காவல் துறை அனுமதி இல்லாமல் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது எனக் கண்டித்து மது அருந்தும் போட்டியைத் தடுத்து நிறுத்தினர்.

மது அருந்தும் போட்டியைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினருக்குப் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. மேலும் இப்படிப்பட்ட போட்டி நடத்துவதன் மூலம் சமூக சீர்கேடு உருவாகியுள்ளதாகச் சமூக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க:பைக் மீது கார் மோதி இருவர் உயிரிழப்பு