கரூர்: கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இரண்டு முக்கிய பேருந்து நிறுத்தங்களில் க.பரமத்தி பேருந்து நிறுத்தமும் ஒன்றாகும். கரூரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள க.பரமத்தி பேருந்து நிறுத்தத்தில் இருந்து தினந்தோறும் கரூர் நகரை நோக்கி டெக்ஸ்டைல் தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், பஸ் பாடி கட்டும் தொழில் நிறுவனங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வந்து செல்கின்றனர்.
இதே போன்று க.பரமத்தி பேருந்து நிறுத்தம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகம், க.பரமத்தி காவல் நிலையம், கால்நடை துறை மருத்துவமனை, ஊராட்சி மன்ற அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய இடமாக க.பரமத்தி பேருந்து நிறுத்தம் உள்ளது. கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் தினந்தோறும் கோவை மார்க்கமாகவும், திருப்பூர் வெள்ளகோயில் வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களாக அரசு பேருந்துகளில் ஒன்-டூ-ஒன் பேருந்துகளை தவிர மற்ற அரசுப் பேருந்துகள் க.பரமத்தி பேருந்து நிறுத்தம் செல்லும் பொதுமக்களை கரூர் பேருந்து நிலையத்தில் ஏற்றுவதில்லை என கூறப்படுகிறது. இதேபோல கோவையில் இருந்து கரூர் நோக்கி வரும் அரசுப் பேருந்துகளில் கோவை பேருந்து நிலையத்தில் க.பரமத்தி பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காது என பேருந்து ஓட்டுநர்கள் பயணிகளை அனுமதிப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், நேற்று (ஜூலை 17) மதியம் 12 மணியளவில் கரூர் பேருந்து நிலையத்திலிருந்து க.பரமத்தியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் அரசு பேருந்தில் ஏற முயன்றபோது பேருந்து ஒட்டுநரும், நடத்துநரும் க.பரமத்தி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என கூறியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பரமத்தி பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை சிறை பிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பரமத்தி போலீசார் மற்றும் அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், பேச்சுவார்த்தையில் பேருந்தை நிறுத்தாத அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மீது புகார் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
இது குறித்து ஈடிவி பாரத் செய்திகளுக்கு க.பரமத்தி பகுதியைச் சேர்ந்த பேபி என்பவர் அளித்த பேட்டியில், “கரூரில் இருந்து கோவைக்கு முக்கிய நெடுஞ்சாலையாக உள்ள கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு வழி சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு முன்னும், பின்னும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் நின்று பொதுமக்களை ஏற்றிச் சென்றது.
கடந்த சில நாட்களாக, அரசுப் பேருந்தில் கரூர் மற்றும் கோவை பேருந்து நிலையத்தில் க.பரமத்தி செல்லும் பொதுமக்களுக்கு ஓட்டுநர்கள் பேருந்தில் ஏற அனுமதிப்பது இல்லை. நேற்று கரூர் பேருந்து நிலையத்திலிருந்து க.பரமத்தி செல்ல அரசுப் பேருந்தில் ஏறியபோது, பேருந்து நடத்துனர் அரசுப் பேருந்தில் ஏற அனுமதிக்கவில்லை. பின்னர், சிறிது நேரம் வாக்குவாதத்திற்கு பிறகு பேருந்தில் ஏற அனுமதித்தினர்” என கூறினார்.
மேலும், கரூர் மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் பொதுமக்களை ஏற்ற மறுக்கும் பிரச்னைக்கு அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:AI பயன்படுத்தி மோசடி - கேரள காவல் துறையில் சிக்கியது எப்படி?