கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதியில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், உழவர் சந்தை, கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றைக் கடந்து செல்வதற்கு மிக உதவியாக இருந்த சாலை, தனியாருக்கு சொந்தமானது எனக் கூறி கடந்த 2016ஆம் ஆண்டு மூடப்பட்டது.
இதனால் குளித்தலை மக்கள் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளும் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், சமூக நல இயக்கங்கள் என அனைத்து தரப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இப்பாதையை மீண்டும் பயன்படுத்த உத்தரவிடக்கோரி 2020ஆம் ஆண்டு குளித்தலை நகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி, சாலையை மக்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கலாம் என கடந்த மார்ச் 17ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், இதற்கான பணிகளை வேகப்படுத்தாமல் காலதாமதம் செய்வதாகக் கூறி மக்கள் சிலர் குளித்தலை நகராட்சி ஆணையரைக் கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆணையர் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரினர்.
தொடர்ந்து, போராட்டம் குறித்து தகவலறிந்த அங்கு வந்து காவலர்களும், வட்டாசியரும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைச் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.