கரூர் மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையான பெரிய குளத்துப்பாளையம் குகை வழிப்பாதை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர், குகை வழிப்பாதையை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது, அரசியலில் 16 கட்சிகளுக்கு சென்று வந்தவர் எல்லாம், இந்த குகை வழிப்பாதை திட்டத்தை நான்தான் செய்தேன் என்று சொல்லக்கூடாது. வெட்கம், மானம் இருந்தால் இனி அவர் சொல்லக்கூடாது. மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொடுத்தது அதிமுக கட்சியும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான். செந்தில்பாலாஜி வேண்டுமானால் இந்த திட்டங்களை நான் செய்தேன் என்று தன்னுடைய கழுத்தில் எழுதி தொங்கவிட்டு செல்லலாம். இதே குளத்துப்பாளையத்தை சேர்ந்த பிரமுகரிடம் இருந்து நிலத்தை அபகரித்த செந்தில்பாலாஜி மீது வழக்கு நடைபெற்று வருகிறது. 24 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் கடத்தி, அதில் இருந்து தப்பிப்பதற்காக அவர் யார் காலில் விழுந்தார் என்று ஊருக்கே தெரியும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவினர் கம்பி எடுத்து அடித்தார்கள் என்று கூறி வரும் செந்தில் பாலாஜி, அதிமுக பிரமுகர் ஒருவரை கற்களால் தாக்கினார். அதனைப் பார்த்து நாங்கள் வேடிக்கை பார்ப்பதா..? ஆதலால் நாங்கள் திருப்பி அடித்தோம். ஆங்காங்கே நிகழ்ச்சிகளில் மொய் வைப்போம் என்று செந்தில்பாலாஜி கூறுகின்றார். அவருக்கு வைத்த மொய்யை திரும்ப அவர் வைக்க மாட்டார். ஆனால் நாங்கள் மொய் வைத்தால் அதிகமாக வைப்போம், என்று காட்டமாக பேசினார்.