கரூர்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மைய அறிவிப்பின்படி வடகிழக்கு பருவமழை பரவலாக தமிழகம் முழுவதும் பெய்து வருகிறது.
மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நேற்று ஒரே நாளில் 234 மி.மீ மழை அளவு கரூர் மாவட்டத்தில் பதிவாகி உள்ளது.
இந்நிலையில், கரூர் நகர் பகுதியில் வரும் அரசு பேருந்தில் தொடர் மழை காரணமாக பேருந்தின் மேற்கூரையில் மழைநீர் கசிந்ததால், பேருந்துக்குள் பயணிக்கும் பயணிகள் குடை பிடித்தபடி பயணிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. அந்த வகையில், கரூர் உப்பிடமங்கலம் பகுதியில் இருந்து கரூர் பேருந்து நிலையம் வரை சென்ற அரசு பேருந்தில், பயணிகள் குடை விரித்தபடி, இருக்கை இருந்தும் அமர முடியாமல் நின்றபடியே பயணித்தனர்.
இதுகுறித்து கரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளருமான முல்லையரசு ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பேட்டியில், “அரசு பேருந்துகளை முறையாக பராமரித்து மலைக்காலங்களில் மழை நீர் கசிவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிருக்கு இலவச பேருந்து வழங்கியுள்ள தமிழக அரசு, அரசு பேருந்துகளை பராமரிப்பு செய்யாமல் இயக்குவது பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே, மழை பெய்யும் நேரங்களில் பொதுமக்கள் பயணிக்க முடியாத வகையில் இருக்கும் அரசு பேருந்துகளை கணக்கெடுத்து, உடனடியாக அதை சரி செய்து பேருந்தை இயக்க வேண்டும். இல்லையெனில் மாற்று பேருந்தை வழங்க வேண்டும்.
பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை ஒட்டி பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இருப்பதால், பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து துறை விரைந்து செயல்பட வேண்டும். திராவிடம் மாடல் அரசு என்று கூறும் திமுக அரசு, மக்களுக்கு சேவை வழங்கும் போக்குவரத்து துறையில், மாடல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் மழையில் நனைந்து செல்லும் பேருந்துகளை இயக்கி வருகிறது. இது போன்று பல மாவட்டங்களில் அரசு பேருந்துகளில் மழைக்காலங்களில் பொதுமக்கள் பயணிக்க முடியாத நிலை உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. எனவே தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி அரசு பேருந்துகளை பராமரிக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: தோல் தொழிற்சாலை கழிவுகளால் பாழாகும் பாலாறு.. அதிகாரிகள் அலட்சியம் செய்வதாக விவசாயிகள் வேதனை..!