கரூர்: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குப்பம் கிராமத்தில் என்.டி.சி எனும் தனியார் கல்குவாரிக்கு அனுமதி வழங்க கருத்துக் கேட்பு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (டிச.15) நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கரூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மற்றும் புகலூர் வட்டாட்சியர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான நன்மாறன், கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என கூட்டத்தில் தெரிவித்து இருப்பதாகவும், இதனை மீறி அனுமதி வழங்கினால் சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடை ஆணை பெற்று இயற்கை வளங்களை பாதுகாப்போம் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறுகையில், ஏற்கனவே இந்த குவாரி லைசன்ஸ் முடிந்து மற்றொரு லைசன்ஸ் மூலமாக உள்ளே வர உள்ளதாகவும், தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசும் விதிகளின் படி 500 மீட்டர் தூரத்தில் குடிநீரேற்று நிலையம் அமைக்கப்பட்ட நிலையில், 5 ஹெக்டர் பரப்பளவில் குவாரி அமைக்க துடிப்பது ஏன்? என்றும் வினா எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து அரசு விதிப்படி கரூர் மாவட்டத்தில் எந்த ஒரு குவாரிகளும் செயல்படுவதில்லை என்றும், லைசன்ஸ் முடிந்த குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. இதனால் அரசிற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஏற்கனவே இதே கல்குவாரியினால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாகவும், ஒருவருக்கு கை இழப்பும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் மாணவர் தற்கொலை