கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு அறிவியல் இயக்க வானவியல் துறை தலைவர் ஜெயமுருகன் செய்தியாளரிடம் பேசுகையில், ”வரும் 26ஆம் தேதி காலை 8 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி கிழக்கு வானில் உதயமாகி மேற்கு திசையில் முதலில் சூரியனை நிலவு மறைக்க தொடங்கும்.
அதன்பின், கொஞ்சம் கொஞ்சமாக சூரிய பிம்பம் மறைந்து காலை 11 மணி 16 நிமிடம் வரை பிறை வடிவில் சூரியன் காட்சி தரும். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் காலை சுமார் 9.31 மணி முதல் 9.33 மணி வரையிலான இரண்டு நிமிடம் மட்டுமே சூரியனுக்கு பின்பு ஒரு நெருப்பு வளையம் போல் தோன்றும். இதுதான் வளைய சூரியன் என அழைக்கப்படுகிறது.
இந்த சூரிய கிரகணமானது தமிழ்நாட்டில் ஊட்டி, கோவை, ஈரோடு, திருப்பூர் ,கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிகத் தெளிவாக தெரிய வாய்ப்புள்ளது, மற்ற மாவட்டங்களில் பகுதி சூரியனாக மட்டுமே தெரியும். இந்த சூரிய கிரகணத்தால் எந்தவித தீய பலன்களும் ஏற்படாது. அதே சமயம் வெறும் கண்களால் சூரியனை காணவும் கூடாது.
அது கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு கண் பார்வை பறி போவதற்கான வாய்ப்பாக மாறிவிடும். எனவே, பாதுகாப்பான முறையில் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக சோலார் முறையில் தயாரிக்கப்பட்ட கண்ணாடி போன்ற அமைப்பிலான உபகரணங்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வழங்கப்பட்டுவருகிறது.
சூரிய கிரகணம் அன்று கரூர் அருகேயுள்ள காந்திகிராமம் பகுதியில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் சோலார் முறையில் தயாரிக்கப்பட்ட கண்ணாடி போன்ற உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சூரிய கிரகணத்தை சுமார் ஒரு கோடி பேர் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நடைபெற உள்ள இந்த சூரிய கிரகணத்தை பார்க்க தவறினால் அடுத்து 2041ஆம் வருடம் நடக்கும் சூரிய கிரகணத்தைத்தான் பார்க்கமுடியும்.
எனவே, இயற்கையாக அதிசயமாக நடைபெறும் இந்த சூரிய கிரகணத்தை பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் கண்டுகளிக்க வேண்டும். சூரிய கிரகணம் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
சூரிய கிரகணம் தொடர்பான ஆய்வுகள் மனிதனுக்கு பயன்படும் வகையில் தொடர்ந்து நடைபெறும்” என்றார்.
இதையும் படிங்க: