கரூர் மாவட்டம் லிங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் தனது தோட்டத்து வீட்டில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் பால், மோர் வியாபாரம் செய்ததுடன் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்குவதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெருமாள் என்பவர் அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரவக்குறிச்சி காவல் துறையினர் வெளிப்புறம் போடப்பட்டிருந்த செல்லம்மாளின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
இதனை அடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை செய்தனர். ஆனால் செல்லம்மாளின் உடலில் மிளகாய்பொடி தூவப்பட்டு இருந்ததால் மோப்ப நாயை மேற்கொண்டு மோப்பம் பிடிக்க இயலவில்லை.
தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பள்ளப்பட்டியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் முகமது ஹாசன் அவரது நண்பர் அஸ்பாக் முபசல் ஆகிய இருவரும் எல்லம்மாளிடம் தனது கார் ஆர்.சி. புத்தகத்தை அடகு வைத்து பணம் பெற்று நீண்ட நாட்களாக பணம் தராமல் இருந்துள்ளார்.
மேலும் தனது ஆர்.சி புத்தகத்தை திரும்பக் கேட்டுள்ளார். அதற்கு எல்லம்மாள் பணம் கொடுத்துவிட்டு ஆர்.சி புத்தகத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக எல்லமாளுக்கும் முகமதுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் எல்லாமாளை முகமது ஹாசன் கீழே பிடித்து தள்ளியுள்ளார். இதில் எல்லம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். தொடர்ந்து முகமது ஹாசநும், அஸ்பாக் முபசலும் சேர்ந்து எல்லமாளை அவரது சேலையிலேயே கட்டி தூக்கில் தொங்க விட்டுள்ளனர். மேலும் காவல் துறையினர் கண்டுபிடிக்காமல் இருக்க மிளகாய் பொடியை அவரது உடலிலும், வீட்டில் பல இடங்களிலும் தூவியுள்ளனர்.
இருந்தபோதிலும் எல்லம்மாள் வீட்டில் இருந்த முகமதுஹாசனின் கார் ஆர்.சி. புத்தகத்தைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களை கைது செய்து விசாரித்ததில் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இன்று இருவரையும் அரவக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி சசிகலா முன்பு ஆஜர்படுத்தினர். குற்றவாளிகளை அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பணம் கொடுக்கல் வாங்கலில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: சாராய வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது; போலீஸ் அதிரடி