கரூர்: மேற்கு வங்க மாநிலம் அமரியா மாவட்டத்தில் உள்ள சூரப்பாடியைச் சேர்ந்தவர் ராஜஸ்தான் முண்டா (37) இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் கரூர் பசுபதிபாளையம் அருகே உள்ள தொழில்பேட்டையில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தார்.
கடந்த மே 14ஆம் தேதி முதல் மூன்று நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் கரோனா பரிசோதனை செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். கரோனா சோதனை முடிவுக்காக காத்திருந்த நிலையில், மனமுடைந்து மே 15ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பசுபதிபாளையம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் உடலைக் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இச்சம்பவம் குறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், கரோனா சோதனை முடிவில் உயிரிழந்த ராஜஸ்தான் முண்டாவுக்கு கரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 'கண்ணீர் அஞ்சலி' - அட்ரஸ் இல்லாத போஸ்டர் உங்களுக்கானதா..?