கரூர் மாவட்டத்தை அடுத்துள்ள க.பரமத்தி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஓன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரிந்துவருபவர் ரா.செல்வக்கண்ணன். இவருக்கு இந்த ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இப்பள்ளியில் இந்தியாவிலேயே வேறு எந்த பள்ளியிலும் இல்லாத அளவிற்கு நவீன வசதிகள் உள்ளன. 5s எனப்படும் ஜப்பானின் உயரிய விருதினை பெற்ற ஒரே பள்ளி ,ISO 9001:2015 தேசிய தர சான்றிதழ் பெற்ற பள்ளி .
இந்தப் பள்ளியில் மட்டும்தான் டிஜிடல் வகுப்பறைகள், ஒவ்வொரு வகுப்பிலும் டிவி, பள்ளி முழுவதிலும் இணையதள வசதி, செல்ஃபோன் வழிக் கல்வி, நவீன கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என மாணவர்களுக்கு தேவையான எல்லா அடிப்படை வசதிகளும் உள்ளன. இதற்காக கடந்த 14 ஆண்டுகளில் பள்ளியின் நலன்கருதி 75 லட்சம் ரூபாய் நன்கொடையாக பெற்று பள்ளி வளர்ச்சியடைந்தது.
மாணவர்களுக்கு தேவையான யோகா, கராத்தே, தியானம், நடனம் (மேற்கத்திய கலை மற்றும் கிராமிய கலை) பாடல், ஓவியம், ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்ற கூடுதல் செயல்பாட்டுத் திறன் மற்றும் கபடி கைப்பந்து, கால்பந்து சதுரங்க விளையாட்டு போன்ற அனைத்தும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன’ என்றார்.
மேலும், இந்த விருது பெறுவது குறித்து பேசிய அவர், இது என் பல நாள் கனவு. இதைபற்றி பேச வார்தைகளே வரவில்லை என்றார்.