கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து முத்தரசன் வெங்கமேடு பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எட்டு வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு அற்புதமான தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழக அரசு சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது. நிலம் கையகப்படுத்தியது ஏற்க முடியாது எனவே நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால் எடப்பாடி அரசு தோல்வியை ஒப்புக் கொண்டு உடனே பதவி விலக வேண்டும்" என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அறந்தாங்கியில் பெரியார் சிலையின் தலையை உடைத்து சேதப்படுத்தியவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும். இல்லாவிட்டால் அதனால் ஏற்படும் பிரச்னைக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சமூகவிரோத கும்பலுக்கு அரசு துணை போகக் கூடாது" என கேட்டுக்கொண்டார்.