கரூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக புகலூர் நகரச்செயலாளர் கே.சி.எஸ்.விவேகானந்தன் மீது புகலூர் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த அலுவலக உதவியாளர் கருப்பையா என்பவர் கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், தன்னை பணி செய்யவிடாமல் கடந்த ஆண்டு தடுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், மிரட்டலுக்கு பயந்து கரூர் மாவட்டத்தில் உள்ள மருதூர் பேரூராட்சிக்குப் பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டதாகவும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இப்புகாரின் பேரில் பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் தலைமையில் 4 காவலர்கள் இன்று அதிகாலை(பிப்.01) புகலூர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள அதிமுக நகரச் செயலாளர் விவேகானந்தன் வீட்டுக்குச் சென்றனர்.
இதனையறிந்த அதிமுக கரூர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகள் அவ்விடம் சென்று காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கைது நடவடிக்கைக்கு உரிய காரணம் கேட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின் காவல்துறையினர் விவேகானந்தனை கைது செய்ய முடியாமல், சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு திரும்பி சென்றனர்.
இதனையறிந்து அங்கு ஏராளமான அதிமுகவினர் கூடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் வழக்கு இடைக்காலத் தடை நீட்டிப்பு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு