கரூர்: கரூரில் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும், கரூர் காவல் கண்காணிப்பாளரிடம் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கரூர் எம்பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "கரூர் மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியளிக்கிறது. கரூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் பேசினேன். ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வருகின்றனர். விரைவில் குற்றவாளியை கண்டுபிடித்துவிடுவோம் என்று உறுதியளித்துள்ளார்.
பாதுகாப்பான சூழலில்லை
நமது குழந்தைகள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமைகளை எதிர்க்கவும் முடியாமல், அச்சமின்றி குற்றவாளிகளை பொதுவெளியில் அடையாளம் காட்டவும் முடியாமல் தற்கொலையை நாடுவது வேதனை அளிக்கிறது. ஒரு சமூகமாகவும், சட்டப்படியும் நாம் நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவில்லை என்பது கசப்பான உண்மை.
குற்றவாளிகள் தலைநிமிர்ந்து நடக்கும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சப்பட்டு தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து நடைபெறுகிறது. ஒரு குழந்தை தற்கொலையை தேர்ந்தெடுக்கிறது என்றால் வாழ்வு எப்படி அதற்கு தாங்க முடியாமல், வலி நிறைந்ததாக இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே நெஞ்சு பதறுகிறது.
ஆணிவேரை அறுத்தெரிய வேண்டும்
குற்றவாளிகள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அத்துடன் ஒரு சமூகமாக நமக்குள்ள பொறுப்பை நாம் உதறித்தள்ளிவிட முடியாது. இம்மாதிரியான பாலியல் குற்றங்களின் ஆணிவேரை அறுத்தெரிய தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
தந்தையாகவும் இருந்து வளர்தெடுத்த அந்த தாய்க்கு, இந்த மகத்தான இழப்பை ஈடுசெய்யும் ஆறுதல் வார்த்தைகளை யாராலும் சொல்ல முடியாது. அந்த தாய்க்கு என் அன்பும், அரவணைப்பும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், இது போன்ற கொடும்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அனைவரும் உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார்.