கரூர்: ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டமானது, கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினர்களான இளங்கோ, சிவகாமசுந்தரி, மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த அனைத்து அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜோதிமணி, ”கரூர் மாவட்டத்தில் குடிநீர், சாலை வசதி, அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்குக் கூடுதல் வசதிகள், 100 நாள் பணி திட்டத்தில் உள்ள குறைபாடுகள், கிராமப்புறங்களில் தனிநபர் கழிப்பிடங்களை அதிகரிப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதில் பல்வேறு குளறுபடிகளைச் சரிசெய்வது குறித்து இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
குறிப்பாக கிராமப்புறச் சாலைகளை இணைப்பதற்கு பிரதமரின் சாலைகள் திட்டம் குறித்து சரிபார்க்கப்பட்ட ஆவணங்களில் அனைத்துச் சாலைகளும் இணைக்கப்பட்டதாகத் தவறான தகவல் உள்ளது. இதனைச் சரிசெய்து இணைக்கப்படாத கிராமப்புறச் சாலைகளை இணைப்பதற்கு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
திருநங்கைகளின் குறைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை
மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைப்படி திருநங்கைகளின் குறைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊரடங்கு காலத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்திருப்பதால் அதனைத் தடுப்பதற்கு கிராமப்புற குழுக்களைத் தீவிரமாகச் செயல்படுத்தி தனி கவனம் செலுத்தப்படும்.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளில் ஒன்று குடிநீர்ப் பிரச்சினை இதனை கவனத்தில்கொண்டு க. பரமத்தி அரவக்குறிச்சி பகுதிக்கு 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது.
தனி காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம்
இதில் அரவக்குறிச்சி பள்ளப்பட்டி பேரூராட்சிகளுக்கு, தனி காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றன. இது தவிர கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் “ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் நிறைவுபெறும்' - கனிமொழி