கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் தனலட்சுமி, நடராஜ் தம்பதியினர். இவர்களுக்குப் பிரகாஷ் என்கிற மகன் உள்ளார். தனலட்சுமி கணவனை இழந்து பல ஆண்டுகளாக தவித்து வந்த நிலையில், குடும்பத்தின் வறுமை சூழ்நிலைக்காக கடந்த 2017ஆம் ஆண்டு, அவரது மகன் பிரகாஷ் தாய்லாந்து நாட்டிற்கு வேலைக்காகச் சென்றுள்ளார்.
வேலைக்குச் சென்ற பிரகாஷ் மீது, கடந்த 2018ஆம் ஆண்டு கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறி, அந்நாட்டு காவல்துறை அவரை சிறையில் அடைத்தது. தாய்லாந்தில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பிரகாஷ், சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவலையடுத்து, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சம்பந்தப்பட்ட உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பிரகாஷின் தாயார் தனலட்சுமி இன்று, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, 'தனது மகனைப் பார்த்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. அவனது உடலை மீட்டு வரும் அளவிற்கு எங்களுக்குப் பொருளாதார வசதியில்லை; தனது மகனுக்கு இறுதிச்சடங்குகள் தங்களது கிராமத்தில் செய்ய நினைக்கிறோம்’ எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் தனது மகனின் உடலை மீட்டுத் தரும் படி மனு அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கேபிள் இணைப்பைத் துண்டித்த தாய் - மகன் தூக்கிட்டு தற்கொலை!