கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த வழியாம்புதூரைச் சேர்ந்த ராம்குமார், ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கு அபர்ணா தேவி (25) என்ற மனைவியும், அஸ்வின் (2) மற்றும் 6 மாதத்தில் நித்தின் என்ற குழந்தையும் இருந்தனர்.
குறைந்த வருமானம் கொண்ட ராம் குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதால், தினசரி குடித்துவிட்டு குடும்பத்தை கவனிக்காமல் இருந்ததாகத் தெரிகிறது. கணவரை திருத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் பலமுறை அபர்ணா தேவி எடுத்துக்கூறியும் ராம்குமார் திருந்தாமல் தொடர்ந்து குடித்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தை நடத்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இதனால் மனமுடைந்த அபர்ணா தேவி, தனது மனதை கல்லாக்கிக் கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் உயிரிழந்த மூன்று பேரின் சடலங்களைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வெள்ளியணை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு தாய் தற்கொலை முயற்சி