கரூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மொத்த காய்கறி சந்தையில் அமைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி நடைபாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். மேலும், மகேந்திரா நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள நவீன கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தின் சோதனை ஓட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “கரூர் மாவட்டத்தில் இதுவரை 23 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அருகில் உள்ள மாவட்டங்களான திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 43 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 5 பேரும் என மொத்தம் 48 பேர் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு இல்லங்களிலேயே காய்கறிகள் கிடைக்கக்கூடிய வகையில் கரூர் நகர பகுதியில் 46 நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் மக்களுக்கு வீடு வீடாகச் சென்று காய்கறிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரூரில், மருத்துவமனை, காய்கறி விற்பனை செய்யப்படும் பேருந்து நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கும் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகேந்திரா நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள நவீன கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தின் சோதனை ஓட்டம் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளாம். அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க...நாடெங்கிலும் ஒற்றுமை தீப ஒளியை ஏற்றிய மக்கள்!