கரூர் மாவட்டம் கலைஞர் அறிவாலயத்தில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்பாலாஜி தலைமையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் ஆன்லைன் வகுப்புகளை நெறிப்படுத்தக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, நகர செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்புகளை நெறிமுறைப்படுத்தக்கோரியும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆன்லைன் கல்வி கிராமப்புறத்தில் மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை. வீட்டில் மூன்று நபர்கள் படித்தால் 3 செல்போன்கள் வாங்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
மேலும், பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவேண்டிய நிலையில் மூன்று தவணைகளில் 500 ரூபாய் வீதம் எடுத்துக்கொண்டு 4,500 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊழலில் அமைச்சர் முதல் முதலமைச்சர் வரை தொடர்புள்ளது.
மேலும், கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிக்காமல் வெறும் தண்ணீரை கரூர் நகராட்சி நிர்வாகம் தெளித்துவருகிறது. கரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகம் முறையாக தெரிவிக்கவில்லை. அடிப்படை வசதி இல்லாமல் கரூர் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருவதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: ’மாணவர்களின் எதிர்காலத்தில் அரசு விளையாடுகிறது’ - மு.க.ஸ்டாலின்