கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டத்திற்குள்பட்ட புதுப்பாளையம் கிராமத்திலுள்ள குளத்தின் அருகே சுடுகாடு அமைக்கும் பணியும், தூர்வாரும் பணியும் நடைபெறுகின்றன. இதனைப் பயன்படுத்தி மணல் திருட்டுச் சம்பவமும் நடைபெற்றுவருவதாகப் புகார் எழுந்தது.
இதனைத் தடுக்க அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி நேரில் சென்று மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களைச் சிறைப் பிடித்தார். தொடர்ந்து இதுதொடர்பாக கரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, பரமசிவம் ஆகிய இருவருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அங்குவந்த அவர்கள் லாரிகளைப் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.
இதுகுறித்து செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள குளத்தை 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாருவதாகக் கூறி சுடுகாட்டுப் பாதைகளைக் குறைத்து சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டுவருகின்றனர்.
கரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணல் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர். மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். இது மீண்டும் தொடர்ந்தால் கண்டிப்பாக நீதிமன்றத்தை அணுகி தக்க தீர்வு பெறுவோம்'' என்றார்.
இதையும் படிங்க: பூட்டிய அறையில் செந்தில் பாலாஜியிடம் நான்கு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை