கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "எழுச்சியோடும் ஆரவாரத்தோடும் வரவேற்றமைக்கு நன்றி. இது தேர்தல் பரப்புரையா அல்லது வெற்றிவிழா பொதுக்கூட்டமா என்று வியந்துப்பார்க்கிறேன். உங்களை தேடி வாக்கு கேட்டு வந்துள்ளேன். கரூர் மாவட்டத்திற்கு நிறைய பெருமைகள் உண்டு. அது போல திமுகவிற்கு கரூர் மாவட்டம் பெருமையை தேடித் தந்துள்ளது.
நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகளை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன. அதில், அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்ட ஆளுங்கட்சியினர் மிரண்டு போய் இருக்கின்றனர். இந்நிலையில், மார்ச் 25 ஆம் தேதி தமிழ்நாட்டில் இயங்கும் மாலைமுரசு எனும் தமிழ் செய்தி தொலைக்காட்சி தென் மாவட்டங்களில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் எனக் கருத்து கணிப்பு மூலம் தெரிவித்தது.
இதனைப் பார்த்து ஆளும் அதிமுக அரசு உடனடியாக அரசு கேபிள் மூலம் அந்த குறிப்பிட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பு தற்போது வரை நிறுத்தப்பட்டுள்ளது. சர்வாதிகார நோக்கோடு, கையில் அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்தால் தொலைக்காட்சி இணைப்பை துண்டித்துள்ளனர். இதெல்லாம் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதியோடு முடிவுக்கு வர உள்ளது. மக்களுடைய வரிப்பணத்தில் இயங்கும் அரசு பல ஆயிரம் கோடி செலவு செய்து தினசரி பத்திரிகைகளில் முழு பக்க விளம்பரங்களை செய்து வருகின்றன. இதையெல்லாம் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி முடிவுக்கு வரப்போகிறது.
மக்களின் வரிப்பணத்தில் மக்களிடமே பொய் விளம்பரங்களை செய்து ஏமாற்றி வருகின்றன. அதிமுக அரசு முகத்திரையை கிழித்து இதற்கு ஒரு முடிவு கட்டப் போகிறார்கள். தமிழ்நாட்டில் பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் பதவி வகித்த இரண்டு அமைச்சர்களில் விஜயபாஸ்கர் என்ற பெயர் கொண்ட இரு அமைச்சர்கள் இருக்கின்றனர். ஒருவர் சுகாதாரத்துறை அமைச்சர் குட்கா விஜயபாஸ்கர், மற்றொருவர் கரூரில் உள்ள மணல் திருட்டு விஜயபாஸ்கர். இருவரும் இந்தத் தேர்தலில் வைப்புத் தொகையை இழந்து விட்டு அரசியலை விட்டு ஓட இருக்கிறார்கள்.
கரூர் அமராவதி ஆற்றில் தண்ணீர், மணல் திருட்டு நடைபெற உடந்தையாக இருக்கிறார் மணல் திருட்டு விஜயபாஸ்கர். அவரது போக்குவரத்துத் துறையில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது, ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற பணிகளை அவரது பினாமிகளுக்கு மட்டுமே வழங்கியுள்ளார். அரசு போக்குவரத்து பேருந்துகளை கூண்டு கட்டும் பணியை மேற்கொள்ள தனது பினாமிகளுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கியுள்ளார். இதனால் உள்ளூரில் உள்ள கூண்டு கட்டும் மற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்கு தமிழ்நாடு அரசு ஒரு மோசமான ஆட்சியை நடத்தி வருகிறது. உதாரணத்திற்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் நிலையத்தில் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது, பொள்ளாச்சியில் மூன்று ஆண்டுகளாக இளம்பெண்களை சித்திரவதைக்கு ஆளாக்கி கொடுமைப்படுத்தியது எனக் கூறிக்கொண்டே போகவலாம்.
இந்தக் கொடுமை காவல்துறைக்கு கூட தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் புலனாய்வுத் துறைக்கு எப்படி தெரியாமல் போனது. தினந்தோறும் முதலமைச்சருக்கு காலை மாலை இரு வேளைகளில் புலனாய்வுத்துறை அறிக்கை வழங்கி இருக்கும் பொழுது ஏன் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.
ஆளும் கட்சியின் தலையீடு தான் இதற்கு காரணம். அதிகாரத்தில் உள்ளவர்களின் வாரிசுகள் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர். சென்னையில் பேனர் வைத்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணத்துக்கு காரணமான அரசுதான் தற்போது ஆளும் அதிமுக அரசு. விவசாயிகளை பாதிக்கும் எட்டுவழிசாலை, டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் என அனைத்திற்கும் காரணமான ஆட்சிதான் பழனிசாமி தலைமையில் நடைபெறக்கூடிய அதிமுக அரசு.
உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி 6 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரசு எத்தனை தொழிற்சாலைகளை தொடங்கியுள்ளது. எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளீர்கள் என்ன சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் நான் கேள்வி எழுப்பினேன்.
இதுவரையிலும் அதற்கு அரசு பதில் அளிக்கவில்லை. முதலமைச்சர் பழனிசாமி எடுபுடி மட்டுமல்ல உதவாக்கரை முதலமைச்சராக இருக்கிறார் என்பதற்கு இதெல்லாம் உதாரணம். கோபத்தில் ஆத்திரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசிவருகிறார். நான் இல்லாததை கூறவில்லை, ஊர்ந்து சென்று முதலமைச்சர் ஆனார் என்று தெரிவித்தேன்.
இவையெல்லாம் வாட்ஸ் அப்பில் வந்த வீடியோவில் பார்த்திருப்பீர்கள். இதற்கு எடப்பாடி பழனிசாமி நான் என்ன பாம்பா, பல்லியா எனக் கேட்கிறார். பாம்பு, பல்லி ஆகியவற்றிடம் இருக்கும் விஷத்தை விட துரோகம் செய்வது தான் பெரிய விஷம். சமூக வலைதளங்களில் பார்த்துதான் தெரிவித்தேன். ஊர்ந்து போய் முதலமைச்சர் ஆனது உண்மையா இல்லையா அதற்கு முதலில் எடப்பாடி பழனிசாமி பதில் கூற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு சவால் விட்ட முதலமைச்சர் முதல் சீமானின் கலாய் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்